பல ஆண்டுகளாக சாலையே இல்லாமல் இருக்கும் மலை கிராமம்! அரசின் நிதிக்கு முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்!
தேனி மாவட்டம் அகமலை மூவாயிரம் அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்த அழகிய மலை கிராமம். இது தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் தாலுக்காவை சேர்ந்தது என்றாலும் கூட போடியில் இருந்து சாலை வசதி கிடையாது. பெரியகுளம் வழியாகத்தான் சாலை வசதி உள்ளது. அந்த சாலையும் கூட மிகவும் குறுகலான கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ள மோசமான சாலை. நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் கூட முறையான சாலை வசதியோ அடிப்படை வசதிகளோ மருத்துவ வசதிகளோ இல்லாத ஏராளமான கிராமங்கள் உள்ளடக்கிய ஒரு தாய் கிராமம் தான் அகமலை.
அவசர மருத்துவ தேவைகளுக்கு கூட குதிரைகள் மூலமாகவோ, டோலி மூலமாகவோ அல்லது ஜீப் மூலமாகவோ நோயாளிகளை இருபத்தி ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியகுளத்திற்கு தான் கொண்டு வர வேண்டும். கரடு முரடான மலைப்பாதைகளைக் கடந்து கீழே வருவதற்குள் நோயாளி ஒரு வழி ஆகி விடுவார். முறையான சாலை வசதி கோரி பல வருடங்களாக போராடி வருகின்றனர் அகமலை மற்றும் சுற்றியுள்ள கிராமத்து மக்கள்.
ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கெடுக்கும் கதையாக அரசு சில சமயங்களில் நிதி ஒதுக்கினாலும் வனத்துறையினர் முட்டுக்கட்டை போட்டு வருவதாக தெரிகிறது. மிக மோசமான சாலை வசதியின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அகமலை சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.இதில் பலர் காயமடைந்தனர்.
காஃபி உட்பட பல பணப் பயிர்கள் விளையும் இந்த மலை கிராமம் போடி தாலுகாவோடும் முழுமையாக இணைய முடியாமலும் பெரியகுளத்தோடு மிக சிரமத்தோடு தொடர்பு கொள்ளும் வகையிலும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது .தன்னுடைய பல தேவைகளுக்கும் பெரியகுளத்தை நம்பி உள்ள இந்த மலை கிராமத்தை பெரியகுளத்தில் இருந்து வெறும் கண்ணிலேயே பார்த்துவிட முடியும். எனவே அகமலை மற்றும் சுற்றியுள்ள மலை கிராமங்களை பெரியகுளம் தாலுகாவோடு இணைத்து அந்த கிராமங்களுக்கு சாலை மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டு கொள்.