40 ஆயிரம் அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபர்! மரணத்துடன் போராடி காப்பாற்றிய மருத்துவர்!
நடுவானில் விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய லண்டன் வாழ் இந்திய மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் விஸ்வராஜ் விமலா. இவர் லண்டனில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இதனையடுத்து தனது சொந்த ஊருக்கு வருவதற்காக விஸ்வராஜ் தனது தாயாருடன் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவருடன் வந்த 43 வயது பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சுவலியின் காரணமாக அவர் மயங்கி விழுந்தார்.
இதன் பின்னர் விமான ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஸ்வராஜ் அந்த பயணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதிர்ஷ்டவசமாக விமானத்தில் செயற்கை சுவாசத்துக்கு பயன்படும் கருவி மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருந்தன. அவற்றின் உதவியுடன் இதயத்துடிப்பு கண்காணிப்பு உபகரணம், ரத்த அழுத்தம் கண்டறியும் கருவி, மற்றும் சக பயணிகளின் உதவியுடன் அவரைக் காப்பாற்ற போராடியுள்ளார்.
சில நிமிட போராட்டங்களுக்குப் பின்பு அந்தப் பயணி கண்விழித்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு நினைவிழந்தார். இந்த முறை அவரைக் காப்பாற்ற நீண்ட நேரம் போராட வேண்டி இருந்தது. எனவே சக பயணியர் மற்றும் விமான ஊழியர்களுடன் விஸ்வராஜ் 5 மணி நேரம் கடுமையாக போராடியதால் அந்தப் பயணி கண்விழித்தார். இதனை அடுத்து விமானம் மும்பை வான் பகுதிக்கு மேலே வந்ததால் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினரிடம் அந்த பயணி ஒப்படைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். தற்போது அந்தப் பயணி நன்றாக இருப்பதாகவும் தனது உயிரை காப்பாற்றிய விஸ்வராஜுக்கு நன்றி தெரிவித்ததாகவும் விமான ஊழியர்கள் தெரிவித்தனர்.
இது பற்றி மருத்துவர் விஸ்வராஜ் கூறுகையில் எனது மருத்துவ பயிற்சியில் இது போன்ற சூழ்நிலைகளை சந்தித்துள்ளேன். எனினும் 40 அடி உயரத்தில் விமானத்தில் இது போன்ற ஒரு சூழலை சந்தித்தது இல்லை. முதலில் ஒரு மணி நேரம் போராடி நினைவைக் கொண்டு வரச் செய்தும் மறுபடியும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சமயத்தில் மிகவும் நீண்ட நேரம் போராட வேண்டி இருந்தது. ஏறக்குறைய 5 மணி நேரம் சக பயணிகளுடன் அவரை உயிருடன் வைத்திருக்க முயற்சி செய்தோம். அந்த நேரம் விமானம் மும்பை பகுதியில் வந்ததால் தரையிறக்கப்பட்டு மருத்துவக் குழுவினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
எனது ஏழு வருட பணி அனுபவத்தில் தாயார் நான் முதன் முறையாக அதிரடியாக செயல்பட்டது கண்டு ஆச்சரியமடைந்தார். என்னால் மறக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
பயணியை காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் பணியாற்றிய பர்மிங்காம் மருத்துவமனை இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு மருத்துவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.