Actor Suri: நடிகர் சூரியின் அம்மன் உணவகம் சீல் வைக்க மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூரிக்கு சொந்தமாக அம்மன் உணவகம் என்ற பெயரில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயும் கடந்த 2022 ஆம் தேதி முதல் அம்மன் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தை சீல் வைக்க மதுரை கலெக்டரிடம் வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்து இருக்கிறார்.
அதில், அம்மன் உணவகத்தை சீல் வைக்க காரணங்களை தெரிவித்து இருக்கிறார். அதாவது, ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் சூரி அவர்களின் உணவகம் செயல்பட தமிழக அரசு சார்பில் 450 சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் மட்டுமே வழங்கப்பட்டது. இருந்த போதிலும், செவிலியர் விடுதியில் கழிவுநீர் தொட்டி அமைந்திருக்கும் 350 சதுர அடி பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள்.
மேலும், இந்த உணவகத்தில் கழிவு நீர் தொட்டி உள்ள பகுதியில் தான் சமையலுக்கு தேவையான காய்கறிகள் நறுக்குவது, சமையல் செய்வது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள். எனவே மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், குழந்தைகள், பெரியவர்கள், வயது முதியவர்கள் என அனைவரும் அந்த உணவகத்தில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
எனவே இதனை தடுக்க உடனடியாக சூரியின் அம்மன் உணவகத்தை சீல் வைக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார். நடிகர் சூர் சில மாதங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் தனது சகோதரர்கள் அம்மன் உணவகத்தை நடத்தி வருவதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.