அடர்ந்த காட்டில் 4 குழந்தைகளுடன் சென்ற விமானம் விபத்து!! 40 நாட்களுக்கு பின்னர் நேர்ந்த அதிசயமான சம்பவம்!!
அமேசான் காட்டில் விமான விபத்து ஏற்பட்டு நான்கு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய அடர்ந்த காடு மற்றும் அதிக மழை பெய்யும் காடு அமேசான். இந்த காடு பிரேசில் மற்றும் கொலம்பியா உட்பட பல நாடுகளில் விரிந்து காணப்படுகிறது. உலகில் மழை அதிகம் பெய்யும் காடு மற்றும் உலக ஆக்சிஜன் தேவை 33% பூர்த்தி செய்யும் காடு என பல சிறப்புகள் இதற்கு உள்ளன. அதிகம் வெப்பநிலை காணப்படும் மாதங்களிலும் இங்கு சூரிய ஒளி படாத இடங்களும் உள்ளன.
அத்தகைய காட்டில் தான் விமான விபத்து ஏற்பட்டு 40 நாட்கள் கடந்து ஒரு பச்சிளம் குழந்தை உட்பட நான்கு குழந்தைகள் உயிருடன் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள கொலம்பியாவில் அமேசான் வனப்பகுதியில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் மக்டலினா மெகுடி வெலேன்ஷ்யா. இவர் அந்த மக்களின் தலைவியாவார்.
இந்த நிலையில் மக்டலினா தனது நான்கு குழந்தைகளுடன் ஒரு சிறிய ரக விமானத்தில் சன் ஜோஷி டி கவ்ரி என்ற நகருக்கு கடந்த மே மாதம் 1-ஆம் தேதி சென்று உள்ளார். இதில் 11 மாதங்கள் ஆன பச்சிளம் குழந்தையும் அடக்கம்.
அமேசானின் அடர்ந்த வனப்பகுதியில் சென்ற போது திடீரென விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி, மக்டலினா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் மக்டலினாவின் 13 வயது,9 வயது, 4 வயது, 11 மாத கைக்குழந்தை ஆகிய நால்வரும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இவர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கி கொண்டதால் வெளியே வரும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் விமானம் விபத்துக்குள்ளான இடத்தினை கண்டறிந்து அங்கு விமானி உட்பட 3 பேரின் உடல்களை மீட்டனர். ஆனால் குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியாத சூழ்நிலையில் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.
தேடுதலின் போதே குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரிய வந்ததால் குழந்தைகள் தேடும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், அமேசான் காடு பற்றி நன்கு அறிந்த பழங்குடியின மக்கள் 70 பேர் களமிறக்கப்பட்டனர். மோப்ப நாய்களும் இந்த தேடுதல் வேட்டையில் பயன்படுத்தப்பட்டன.
தீவிர தேடுதல் வேட்டையில் 40 நாட்கள் கழித்து நான்கு குழந்தைகளும் ஜூன் 10 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப் பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர்.
தற்போது அந்த குழந்தைகளின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. விபத்தில் பலியான பழங்குடியின தலைவி மக்டலினாவை விட்டு அவரது கணவர் விலகி வேறோர் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். தற்போது மக்டலினாவின் குழந்தைகளை அவர் தான் கவனித்து வருகிறார். விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.