Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது? அமலியில் ஈடுபடுமா பாஜக?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. முதல் நாளில் அண்மையில் மறைந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சட்டப்பேரவை நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது ஆகவே இன்றும் நாளையும் சட்டசபையை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று காலை 10 மணி அளவில் அவை தொடங்கியவுடன் வினா, விடை நேரம் நடைபெறுகிறது. இதனை எடுத்து இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்து பேச இருக்கிறார் இது குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் கருத்து தெரிவிப்பதற்கு நேரம் ஒதுக்கப்படும் அதன் பிறகு இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

அத்துடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக 5 வருடங்களாக விசாரணை நடத்தி வந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் உள்ளிட்டோரின் ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமே நேற்றைய சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று கொண்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பங்கேற்றுக் கொள்ளவில்லை.

அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் காரணமாகவே, முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்றுக் கொள்ளவில்லை எனவும், இன்றைய தின கூட்டத்தில் பங்கேற்றுக் கொள்ள உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

சட்டசபையில் அதிமுகவின் துணைத் தலைவர் பதவி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தரப்பும் மனுக்களை வழங்கியுள்ளனர். இதுகுறித்து சட்டப்பேரவையில் விளக்கமளிக்க உள்ளதாக சபாநாயகர் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு குறித்தும் சபாநாயகர் அவருடைய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே அதிமுக உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, இன்றைய தின கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version