அமமுகவின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் திமுக சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அணி ஒன்று தயார் செய்யப்பட்ட நிலையிலே, இப்பொழுது டி.டி.வி தரப்பும் இந்த அணியை தயார்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்ததாவது,
எங்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு அணியை உருவாக்கி இருக்கின்றோம். இயற்கை நமக்கு கொடுத்து இருக்கின்ற ஒரு சில இயற்கைச் செல்வங்களை பாதுகாப்பதில் விழிப்புணர்வுடன் இருப்போம் என்று தெரிவித்திருக்கின்றார் டி.டி.வி தினகரன்.
அதோடு, உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதற்கான இயக்கங்களை மட்டும் உருவாக்கிவிட்டு இருந்துவிடாமல் தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை அக்கறையுடன் பாதுகாத்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இது நம்முடைய நல்வாழ்விற்காக நாம் செய்ய வேண்டிய கடமை பலவிதமான வளங்களும், நீர்நிலைகளும், மற்றும் தாவரங்களும் இயற்கை நமக்கு கொடுத்துச் சென்ற நன்கொடைகள். அவற்றை பத்திரமாக பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது நம்முடைய பொறுப்பு.
இதற்காகவே அரசியலிலும் சுற்றுச்சூழலுக்கான கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது . நம்முடைய பகுதி மக்களுக்கு நாம் தேவையான அனைத்தையும் பற்றி யோசித்து செயல்படவேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நாம் நடக்க வேண்டும். நம்முடைய கழகத்தின் சார்பாக அணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு பிரிவானது இன்று முதல் தயார் படுத்தப்படுகின்றது. இந்த அணியின் தலைவராக தாம்பரம் நாராயணன் அவர்களுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது. செயலாளராக வழக்கறிஞர் நல்ல துரை அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். நம்முடைய கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும், மற்றும் உறுப்பினர்களும், இவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்திருக்கின்றார்.