Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மழை பெய்ய வேண்டி வித்தியாசமான வேண்டுதல்!!! இறந்த கழுகுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்ற மக்கள்!!! 

#image_title

மழை பெய்ய வேண்டி வித்தியாசமான வேண்டுதல்!!! இறந்த கழுகுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்ற மக்கள்!!!

மழை பெய்ய வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்த கழுகு ஒன்றுக்கு பாடை கட்டி இறந்த அந்த கழுகை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட கிச்சகத்தியூர், பழத்தோட்டம், வச்சினாம்பாளையம், மூலத்துறை, இலும்பம்பாளையம், லிங்காபுரம், திம்மராயன்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களை சுற்றி 500க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமங்களில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் மக்கள் பலவிதமான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திம்மராயன்பாளையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியம்மா என்பவருடைய தோட்டத்தில் கழுகு ஒன்று இறந்து கிடந்தது. இதையடுத்து கழுகு இறந்து கிடந்த இடத்திற்கு பொதுமக்கள் சென்று இறந்து கிடந்த கழுகை பார்த்தனர். விவசாய நிலத்தில் அதுவும் கிருஷ்ணர் ஜெயந்தி அன்று கழுகு இறந்து கிடப்பதால் விவசாயத்திற்கும் 18 கிராமங்களுக்கும் நல்லது இல்லை என்று நினைத்து இறந்த கழுகிற்கு ஈமச்சடங்கு நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து இறந்த கழுகுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கழுகை எடுத்துச் செல்வதற்கு பாடை கட்டப்பட்டது. பின்னர். இறந்த கழுகை பாடையில் வைத்து தோளில் சுமந்து ஊர்வலமாக பவானி ஆற்றங்கரைக்கு எடுத்து சென்றனர். பின்னர் அங்குள்ள பொது இடத்தில் சடங்குகள் செய்யப்பட்டு சம்பிரதாயப்படி இறந்த கழுகை எரியூட்டி வழிபட்டனர். பின்னர் கழுகின் அஸ்தி பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவர் “கருடன் கழுகு விளை நிலத்தில் கிடந்தால் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களிலும் மழை பெய்யாது. மழை பெய்யவில்லை என்றால் விவசாயம் பாதிக்கப்படும்.

இதே போல 20 ஆண்டுகளுக்கு முன்னர் விளைநிலத்தில் கழுகு ஒன்று இறந்து கிடந்தது. அந்த கழுகுக்கும் இதே போல ஈமச்சடங்கு நடத்தினோம். அதன் பிறகுதான் சுற்று வட்டாரம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது. கிருஷ்ண ஜெயந்தி நாள் அன்று விவசாய நிலத்தில் கழுகு இறந்து கிடந்ததை பார்த்த மக்கள் அனைவரும் அச்சம் அடைந்தனர். அதனால் இறந்து கிடந்த கழுகுக்கு முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தி வழிபட்டோம்” என்று கூறினார்.

 

Exit mobile version