Tiruvallur: திருவள்ளூரில் 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அந்த கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் அவரை 2 வருடமாக காதலித்து வருவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த 19-வயது இளம்பெண் ஒருவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த லோகேஷ் என்பவர் அந்த இளம்பெண்ணிடம் தனை இரண்டு வருடமாக காதலித்து வருகிறேன், என்னை நீயும் காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார்.
ஆனால் லோகேஷ் என்பவரை காதலிக்க அவருக்கு விருப்பம் இல்லை. இதைத்தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி லோகேஷ் அந்த கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது யாருக்கும் தெரியாமல் வீட்டின் மாடி வழியாக ஏறி குதித்து மாணவியின் வீட்டிற்குள் சென்றார். இதனை பார்த்த அந்த கல்லூரி மாணவி கூச்சலிட்டு சத்தமாக கத்தி உள்ளார். அதை கேட்ட ஊர் மக்கள் விரைந்து வந்து லோகேஷ் என்பவரை எச்சரித்து அனுப்பினர்.
உடனே அந்த செய்தி பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த மாணவி வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் மயங்கி கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லோகேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.