Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருப்பத்தூர் அருகே இளைஞர் ஒருவர் ரோட்டில் தீக்குளிப்பு;அதிரவைக்கும் காரணம்?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு ஜூலை 31- ஆம் தேதி வரை,தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளுடனும்,தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் தளர்வு இன்றியும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்த வகையில் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஆகிய நேற்று தமிழ்நாடு முழுவதும் தளர்வு இல்லா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
தேவையின்றி ரோட்டில் சுத்துபவர்களின் மீதும், அத்துமீறுபவர்களின் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்ற கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அடுத்தநாள் எச்சரித்து வாகனங்களின் சொந்தக்காரரிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

ஆனால் நேற்று திருப்பத்தூரில் அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஒய்.ஆர் தியேட்டர் அருகில் அவர் சென்றபோது போலீசார் அவரை விசாரித்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்து உள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் வண்டியில் உள்ள பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் கருகிய நிலையில் இருந்த அவர் தமது நிலைக்கு போலீசார் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version