100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு அவசியமா? முக்கிய தகவலை வெளியிட்ட மின்சாரத்துறை அமைச்சர்!
தற்பொழுது பருவமழையானது குறிப்பிட்ட இடங்களில் தீவிரம் காட்டி பெய்து வருகிறது. இது குறித்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க கோரி மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அங்குள்ள நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகிறோம்.
அதேபோல நாளடைவில் வரும் வடகிழக்கு பருவமழை குறித்தும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாதந்தோறும் சிறப்பு பராமரிப்பு பணிகள் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு பராமரிப்பில் மட்டும் 44 ஆயிரம் பழுதடைந்த மின் கம்பங்களை தற்பொழுது வரை மாற்றியுள்ளோம். இவ்வாறு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதால் மக்களுக்கு மின்விநியோகம் நிலையானதாக உள்ளது.
கருணாநிதி அவர்கள் விவசாயிகளுக்கு அளித்த சிறப்பு திட்டத்தை அடுத்து முதல்வர் அவர்கள் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை வழங்கியுள்ளார். கிட்டத்தட்ட நூறு நாளில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பருவமழையால் சீர்காழி, மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் போன்றவை பெரும் பாதிப்பை அடைந்தது.
முதல்வர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணங்களையும் வழங்கினார். அதேபோல மின்சார ரீதியாக தெரிவிக்கப்படும் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து தருவது குறித்து மக்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் 100 யூனிட் இலவச மின்சாரம் ஆதார் எண்ணுடன் இணைத்தால் தான் தொடரும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கூறினார். வழக்கம்போல் அனைவருக்கும் 100 யூனிட் மானியம் மின்சார சேவை தொடரும் என்று தெரிவித்தார்.