Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

இனி இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில், முதன்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன் பிறகு, உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், அதன் தாக்கத்தால் உலகின் பல்வேறு நாடுகள் நிலைகுலைந்து போயின.

இதனால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். பலக்கட்ட ஆய்வுக்கு பிறகு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு,  அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தின.

அந்த வகையில், இந்தியாவிலும் இந்த கொரோனா தொற்றின் பரவல், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. அந்த வகையில் தொற்றில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அதன்படி, மருத்துவமனைகள் மட்டுமின்றி ஆங்காங்கே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை கட்டாயமில்லை என அறிவித்தது. எனினும், ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் அவருக்கான அத்தியாவசிய சேவைகள், பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இருப்பினும் சில கொரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் என்று கூறுவதாக புகார்கள் வந்ததையடுத்து மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஆதார் கட்டாயம் அல்ல. கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு கூட ஆதார்  கட்டாயமல்ல என தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தடுப்பூசி போட வரும் மகளிடம் ஆதார் அட்டை கேட்க வேண்டாம் என்றும், சம்பத்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சகத்தின்  கொள்கையின்படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Exit mobile version