தேங்காய் சுடும் திருவிழா மூலம் ஆடி மாதத்தை வரவேற்கும் சேலம் பகுதி மக்கள்

0
241
Aadi 1 Festival in Salem Area-News4 Tamil Online Tamil News Channel

தேங்காய் சுடும் திருவிழா மூலம் ஆடி மாதத்தை வரவேற்கும் சேலம் பகுதி மக்கள்

ஆடி மாதம் துவங்கியதையடுத்து இதை வரவேற்கும் வகையில், சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழாவின் மூலம் பொதுமக்கள் கோலாகலமாக இதை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாளை, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தேங்காய் சுடும் பண்டிகையாக கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

இதற்கு புராண கதையின் வரலாற்றை அடிப்படையாக கூறுவார்கள் அதாவது ஆடி மாதத்தில் துவங்கிய மகாபாரத போர் 18 நாட்கள் நடைபெற்று, ஆடி 18ம் தேதி முடிவுக்கு வந்தது. இதை நினைவு கூறும் வகையில், இப்பகுதி மக்கள் ஆடி 1ம் தேதியை தேங்காய் சுடும் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

அதாவது அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று, ஆடி18 அன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளன்று, பாண்டவர் படையை சேர்ந்தவர்கள்,  விநாயகர் மற்றும்  அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்து தர்மம் ஜெயிக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார்களாம்.

அப்போது போர்க்களத்தில் பாத்திரம் கிடைக்குமா?! அல்லது காய்கள்தான் கிடைக்குமா?! அதனால் கிடைப்பதை வைத்து  தேங்கய்க்குள் அரிசி, வெல்லம், எள், ஏலக்காய் போன்ற பொருட்களை சேர்த்து சுட்டு படைச்சு, போரில் வென்றதால் அன்றிலிருந்து ஆடி 1 அன்று இந்த தேங்காய் சுடும் பூஜை உண்டானதாக செவி வழிச் செய்திகள் கூறப்படுகின்றன.

இதன்படி சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் வீடுகள் முன்பாக இனிப்பு பொருட்கள் அடங்கிய தேங்காயினை குச்சியில் சொருகி அதை தீயில் சுட்டு, பிள்ளையாருக்கு வைத்து பூஜை செய்த பின்னர் தங்களுடைய உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். 

தேங்காயை ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் சுட்டதற்கு பிறகு  அதை அருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்து வழிபட்டனர். அதன் பின்னர் அந்த தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த இனிப்புடன் கலந்த தேங்காயை  உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். 
 
இவ்வாறு நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் இனிப்பு பொருட்களும் மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.