தொடர்ந்து சரிந்து வரும் PPF கணக்கின் வட்டி விகிதம்…திட்டம் பலனை தருமா ?

0
161

PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி நீண்ட காலம் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் நிலையான வருமானம் மற்றும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொது வருங்கால வைப்பு நிதியின் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டது மற்றும் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதே சமயம் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து பிபிஎஃப் மீதான வட்டி விகிதங்கள் தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருகிறது. அதன்பிறகு 2014-ம் ஆண்டில் பிபிஎஃப் முதலீட்டு வரம்பை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக அரசு உயர்த்தியது.

அதனைத்தொடர்ந்து வட்டி விகிதம் 8.8 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைந்துள்ளது, கிட்டத்தட்ட பத்து வருடத்தில் இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் 1.7 சதவீதம் குறைந்து இருக்கிறது. இந்த திட்டத்திற்கு ஏப்ரல் 1, 2013 முதல் மார்ச் 31, 2014 வரை மொத்த வட்டி 8.7 சதவீதமாகவும், முதலீட்டு வரம்பு ரூ.1 லட்சமாகவும் இருந்தது. இதற்குப் பிறகு ஏப்ரல் 1, 2014 முதல் மார்ச் 31, 2016 வரை, முதலீட்டு வரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது அப்போது வட்டி விகிதம் 8.7 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு ஏப்ரல் 2016 மற்றும் செப்டம்பர் 2016 க்கு இடையில் வட்டி விகிதம் திருத்தப்பட்டு 8.1 சதவீதமாகக் குறைந்தது.

அடுத்ததாக அக்டோபர் 2016 மற்றும் மார்ச் 2017-க்கு இடையில் பிபிஎஃப் வட்டி விகிதம் மீண்டும் குறைந்து 8 சதவீதமாகக் குறைந்தது மற்றும் ஜூன் 2017 வரை வட்டி விகிதம் 7.9 சதவீதமாகக் குறைந்தது. செப்டம்பர் மாதத்திற்குள் பிபிஎஃப் வட்டி விகிதம் 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. பின்னர் 2018 ஜனவரி மற்றும் செப்டம்பர் இடையே 0.20 சதவீதம் சரிந்து வட்டி 7.6 சதவீதமாக குறைந்துள்ளது. அதன்பிறகு அக்டோபர் 2018 மற்றும் ஜூன் 2019 க்கு இடையில் வட்டி விகிதம் அதிகரித்து 8 சதவீதமாக அதிகரித்த நிலையில் மீண்டும் ஜூலை 2019 முதல் மார்ச் 2020-ல் சரிந்தது. தற்போது வரை பிபிஎப் திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக இருந்து வருகிறது.