பொதுவாக வேலை பார்க்கக் கூடிய மக்கள் மட்டுமின்றி உதவித்தொகை பெறக்கூடிய மக்களும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில உதவி தொகைகளை பெறுவதற்கு வங்கி கணக்குகள் மிக முக்கியமானதாக உள்ள நிலையில், தற்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து மத்திய அரசின் விளக்கம் :-
ஒருவர் இரண்டு மூன்று வங்கி கணக்குகள் வைத்திருப்பது அவர்களுடைய வேலைகளை பொருத்ததே ஆகும். அதிலும் குறிப்பாக பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கு இத்தகைய அக்கவுண்ட் எண்ணிக்கைகள் வைத்திருப்பது எளிதான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு உள்ள சூழ்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வேகமாக பரவி வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரக்கூடிய இந்த தகவலை மத்திய அரசு முழுவதுமாக மறுத்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த எந்த விதமான வழிகாட்டுதல்களையும் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றும் இது போலியான தகவல் என்றும் மத்திய அரசினுடைய அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிக்கை தகவல் அலுவலக சரி பார்ப்பகம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் இது போன்ற தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் இது போன்ற தவறான செய்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.