லஞ்சத்தை ஒழிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அதிரடி கருத்து!

0
145

நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களை போதுமான அளவில் திறக்கக் கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று கிருபாகரன், புகழேந்தி தலைமையிலான நீதிபதிகளின் அமர்வு  பரிசீலனை செய்தது. 

அப்போது அம்மனுவில், அரசு ஊழியர்கள் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாக சொல்லப்படுவது தவறான தகவல் என்றும் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றைப் பற்றி விசாரணை நடத்திய நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். 

நீதிபதிகள் கூறியதாவது, லஞ்ச ஒழிப்பு துறையினரின் அதிரடி சோதனையின்போது பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கு லஞ்சம் பெறவில்லை என்றால் எப்படி பணம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விசாரணை நடத்தினர்.

அதுமட்டுமன்றி ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை அளித்தால்தான் இதுபோன்ற சட்ட விரோதமான குற்றங்களை தவிர்க்க முடியும் என்று அதிரடியான கருத்தை தெரிவித்தனர் நீதிபதிகள். அத்துடன், இந்த அதிரடியான சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் யார்? என்றும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு? என்று கேள்விகளை எழுப்பினர் நீதிபதிகள்.

இந்த கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் உறுதியான பதில் அளிக்காததால், இந்த வழக்கை தள்ளி வைத்தனர் நீதிபதிகள். அது மட்டுமன்றி அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமான மற்றும் உறுதியான பதில்களை அளிக்கும்படி தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.