Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

#image_title

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

வனப்பகுதியில் விவசாய நிலங்களுக்கான மின்வேலிக்காக மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின்சார வேலியில் சிக்கி, யானைகள் பலியாவதை தடுப்பது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகளும், மின்துறை அதிகாரிகளும் சோதனை நடத்த பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தனர்.

யானைகள் மின்சாரம் தாக்கி பலியாவதை தடுக்க தமிழக சட்டமன்றத்தில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் யானைகள் வழித்தடங்களை கண்டறிவது, கூட்டு சோதனை நடத்துவது, தாழ்வான மின் கம்பிகளை சரி செய்வது, சாய்ந்த மின் கம்பங்களை சரி செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும், அப்பணிகளை ஓராண்டில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் மின்வேலிகள் அமைப்பது தொடர்பான வரைவு விதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.வனப்பகுதி விவசாய நிலங்களுக்கான மின்வேலிகளுக்கு மின்சாரம் திருடப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து விளக்கமளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தர்மபுரியில் மூன்று யானைகள் பலியான சம்பவத்தில் மின்வேலி அமைத்திருந்த விவசாயி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இரு அதிகாரிகள் ஆஜராவதில் இருந்து விலக்களித்தனர்.

முன்னதாக, மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த உத்தரவிட்ட வழக்கில், கொடைக்கானலில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏ.டி.எம்.கள் முறையாக செயல்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கொடைக்கானல் நகராட்சி தரப்பு வழக்கறிஞர், நான்கு ஏ.டி.எம்.கள் தான் செயல்படாமல் உள்ளதாகவும், அவை விரைவில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், இந்த ஏ.டி.எம்.களை உடைத்து அதிலிருந்து பணம் திருடப்படுவதாகவும் தெரிவித்தார்.

பின்னர், மேகமலை பகுதியில் பிளாஸ்டி தடை உத்தரவு அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேனி மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Exit mobile version