நடிகர் தனுஷ் அறிமுகமான் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தவர்தான் அபினவ். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களிடமும் பிரபலமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். 3 ரோசஸ் விளம்பரத்தில் இவரை பார்க்கலாம். ஜங்சன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், இவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை. எனவே, இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. எனவே, அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அபினவ் சிரமப்பட்டார்.
இதன்காரணமாக, வீட்டில் உள்ள பொருட்களை கூட ஒவ்வொன்றாக விற்கும் நிலை ஏற்பட்டதாக சில வருடங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்தார். யாரேனும் தனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தால் என் வாழ்க்கை மாறும் என்றெல்லாம் கோரிக்கை வைத்தார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
ஒருகட்டத்தில் எந்த வாய்ப்பும் இல்லமால் முடங்கிப்போனார். இந்நிலையில்தான், இவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருக்கு லிவர் சிரோஸில் என்கிற நோய் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டால் இந்த நோய் வரும் என சொல்லப்படுகிறது. சிகிச்சைக்கு 28 லட்சம் வரை செலவாகும் என்பதால் யாரேனும் தனக்கு உதவும் படி கோரிக்கை வைத்திருக்கிறார்.
பொதுவாக திரையுலகில் இப்படி நலிந்த நடிகர்கள் சிலர் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். அதில் சிலர் உதவிகள் பெற்று மீண்டு வந்திருக்கிறார்கள். பாவா லட்சுமணன், சிரிக்கோ உதயா ஆகியோரை இப்படி சொல்ல முடியும். அதேநேரம், போண்டா மணி, அல்வா வாசு உள்ளிட்ட சிலர் சிகிச்சைக்கு பணமின்றி இறந்தும் போயிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.