‘ஹே ராம்’ படத்தை எடுத்ததற்கு இதுதான் காரணம்! ராகுல் காந்தியிடம் மனம் திறந்த கமல்ஹாசன்!

0
191

உலகநாயகன் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமென்றால் அது ‘ஹே ராம்’ படம் தான், இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். இப்படத்தில் சாகேத் ராம் என்ற முக்கிய வேடத்தில் அவர் நடிக்க, உடன் முக்கிய கதாபாத்திரங்களில் ஷாருக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, கிரிஷ் கர்னாட் மற்றும் நாசர் போன்ற பலர் நடித்திருந்தனர். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தனது ஹே ராம் படத்தைப் பற்றி பேசி வந்த நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ராகுல் காந்தியுடனான உரையாடலில் தான் ஏன் அந்த உருவாக்கினேன் என்பதற்கான காரணத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

அவர் கூறுகையில், நான் இளம் வயதில் இருந்தபோது இருந்த சூழல் என்னை காந்தியின் கசப்பான விமர்சகனாக மாற்றியது. சுமார் 24-25 வயதில், நானே காந்தியை பற்றி முழு வரலாற்றையும் தெரிந்துகொண்டு அவருக்கு ரசிகனாகிவிட்டேன். உண்மையில் மற்றவர்களை திருத்திக் கொள்ளவும் மற்றும் மன்னிப்பு கூறவும் தான் நான் இந்த ‘ஹே ராம்’ படத்தை உருவாக்கினேன். அப்படத்தில் நான் காந்திஜியைக் கொல்ல வேண்டும் என்று தீவிர நோக்கமுடைய கொலையாளியாக நடித்தேன்.

காந்தியை கொலை செய்ய நினைக்கும் ஒருவர் அவரை பற்றிய உண்மை தெரிந்ததும் மாறிவிடுகிறார், ஆனால் உண்மை தெரியாத மற்றொருவர் அவரை கொலை செய்து விடுகிறார், இதுதான் படத்தின் கதை என்று கூறினார். இளம் வயதில் காந்தியை பற்றி என் தந்தையிடம் விமர்சித்த நான் ‘ஹே ராம்’ படத்தின் மூலமாக அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.