Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அந்த காட்சிகளை தூக்கிடறோம்!.. எம்புரான் பட சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட மோகன்லால்!..

empuraan

Empuraan: பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் எம்புரான். பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து ஏற்கனவே வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகியுள்ளது. மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக எம்புரான் வெளியாகியிருக்கிறது.

லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு அதிக அளவில் முன்பதிவு இருந்தது. தமிழில் விடாமுயற்சியை விட இந்த படத்திற்கு அதிக டிக்கெட் முன்பதிவு இருந்தது. படம் வெளியாகி 2 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை தாண்டியது.

இந்த படத்தில் சிறுபான்மையினர் மீது மதவாத கட்சிகள் நடத்தும் தாக்குதல், குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது மதவாத கட்சிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இப்படத்திற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். எனவே, படத்தின் சில காட்சிகளை நிக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் ‘எம்புரான் படத்தின் சில பகுதிகள், ரசிகர்கள் பலரது மனதை புண்படுத்தி இருப்பதாக அறிந்தேன். எந்த ஒரு அரசியல் கட்சி, கருத்தியல் மற்றும் மதத்திற்கு எதிராகவும் வெறுப்பை உண்டாக்கக் கூடாது என்பது ஒரு கலைஞனாக என்னுடைய கடமையாகும். எனவே, நானும் எம்புரான் படக்குழுவும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு பொறுப்பேற்கும் விதமாக சர்ச்சைக்குரிய பகுதிகளை படத்திலிருந்து நீக்க முடிவு செய்திருக்கிறோம்’ என தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version