Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொன்னியின் செல்வன் பட பாடலை முனுமுனுக்கும் விஜய்… சரத்குமார் பகிர்ந்த சீக்ரெட்!

பொன்னியின் செல்வன் பட பாடலை முனுமுனுக்கும் விஜய்… சரத்குமார் பகிர்ந்த சீக்ரெட்!

தமிழ் சினிமாவில் இப்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் சரத்குமார்.

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்பு கதாநாயகனாகி ஒரு ரவுண்ட் வந்தவர் சரத்குமார். அவர் நடித்த நாட்டாமை மற்றும் சூர்யவம்சம் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு மீண்டும் அவர் குணச்சித்திர வேடங்களுக்கு திரும்பினார்.

தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்து வரும் அவர் இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இன்னும் இரு தினங்களில் படம் ரிலீஸாக உள்ள நிலையில் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் இணைந்து நடித்து வரும் அவரிடம் “பொன்னியின் செல்வன் பற்றி விஜய் உங்களிடம் ஏதாவது பேசினாரா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு சரத்குமார் “ஷூட்டிங் போது விஜய் பொன்னி நதி பாடலை முனுமுனுத்துக் கொண்டு இருந்தார்” என பதிலளித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத் தேவனின் அறிமுகப் பாடலாக இந்த பாடல் உருவாகியுள்ளது. முதலில் மணிரத்னம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படத்தை உருவாக்க நினைத்த போது அதில் வந்தியத் தேவனாக விஜய்தான் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Exit mobile version