நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் ரிலீசாகும் விஜய்சேதுபதி படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன.கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததே இதற்க்குக் காரணம்.கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.இதனால் தமிழில் நிறைய திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.அந்தத் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் லாபம்.
லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார்.மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இந்த படத்தை இயக்கினார்.விஜய் சேதுபதி பி.ஆறுமுகக்குமார் உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்தார்.டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.இந்தத் திரைப்படத்தின் வேலைகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகிறது.தற்போது படக்குழு இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் செப்டம்பர் 9ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகிறது.திரையரங்கில் தற்போது 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனால் தமிழ் திரைப்படங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.அனேகமாக முதலில் வெளிவரும் முன்னணி நடிகரின் திரைப்படம் இதுவாகவே இருக்கும் என தெரிகிறது.
மேலும் இதுபற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கேட்டபோது இந்த வெள்ளிக்கிழமை நேரடித் தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.ஆனால் மம்மூட்டியின் டப்பிங் படமான சர்க்கிள்,வீராதி வீரன்,காஞ்சுரிங்-3 என்று சில படங்கள் ரிலீஸுக்கு வருகின்றன.செப்டம்பர் 3-ம் தேதி ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் வெளியாகிறது.ஆனால் தமிழ் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே வரும் செப்டம்பர் 9,10-ம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தியிலிருந்து வரிசையாக வெளியாகும்.
செப்டம்பர் 9-ம் தேதி விஜய் சேதுபதியின் லாபம் மற்றும் கங்கனாவின் நடிப்பில் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படங்களின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளன.திரௌபதி இயக்குநரின் படம் ருத்ரதாண்டவம் வருகிற மூன்றாம் தேதியன்றோ அல்லது பத்தாம் தேதியன்றோ வெளியாகலாம் என்று அவர் கூறினார்.