கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் பழம்பெரு நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவரை ரசிகர்கள் ‘அப்பு’ என்று அன்போடு அழைத்தனர்.
இவர் இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பினால் மரணம் அடைந்தார். தன்னுடைய 46 வயதிலேயே மாரடைப்பு வந்து மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புனித் ராஜ்குமார் நடிகராக மட்டுமல்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வந்தார். இலவச கல்விக்கூடங்கள், இலவச கல்வி என ஒப்பற்ற சேவையை ஆற்றி வந்தார்.
இவரின் மறைவிற்கு ஒட்டு மொத்த திரையுலகமே கண்ணீர் கடலில் மிதந்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் விஷால்-ஆர்யா நடித்த ‘எதிரி’ படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று ஹைதிராபாத்தில் நடைபெற்றது.
அப்போது மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது நடிகர் விஷால் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை நினைவு கூர்ந்து பேசினார்.
அந்த மேடையில் பேசிய நடிகர் விஷால் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மூலம் இலவச கல்வி பயின்ற 1800 மாணவர்களின் இலவச கல்வியை அடுத்த வருடத்திலிருந்து தான் ஏற்று கொள்வதாக அறிவித்தார்.