தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பான மாதம் ஆகும். அதுவும் ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனை வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித் தரும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு.
மேலும் ஆடி மாதத்தை “சக்தி மாதம்’ என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
சுக்கிர பலம் பொருந்திய வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன்களையும், மகாலட்சுமியையும் வணங்கும்போது மாங்கல்ய பலம், செல்வ செழிப்பு மற்றும் குடும்பத்தில் நன்மையும் கிடைக்கின்றது.
எனவே, பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.எனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி என்று சொல்வார்கள்.
ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் மணமாகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது பலரின் நம்பிக்கை ஆகும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது மிகவும் சிறப்பு.