கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

0
134
ADMK Jayakumar Ex Minister Arrest

கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக தொண்டரை அடித்ததாக கூறி அக்கட்சியினர் தொடர்ந்த வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.இந்த தேர்தலில் அதிமுக இழந்த செல்வாக்கை பெறவும்,ஆளும்கட்சியாக இருக்கும் திமுக தங்களுக்கான செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்தன.

அதே வேகத்தை தேர்தலில் முறைகேடுகள் நடக்காத வண்ணம் கவனிக்கவும் இரு கட்சிகளும் தீவிரமாக பணியாற்றின.ஆளுங்கட்சியாக உள்ள திமுகவினர் ஆங்கங்கே முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்டித்து திமுக நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்கு சாவடியில் கள்ள ஓட்டு போடுவதை அறிந்த முன்னாள் அமைச்சர் அங்கு வந்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தார்.இந்த சம்பவத்தை அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிகழ்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கள்ள ஓட்டு போட முயன்றவரை சிலர் அடிக்க முயல அவர்களிடம் அடிக்க கூடாது என ஜெயக்குமார் எச்சரித்துள்ளது தெளிவாக பதிவாகியுள்ளது.மேலும் இந்நிகழ்வின் போது சம்பந்தப்பட்ட குற்றவாளியின் சட்டையை கழட்டி இழுத்து சென்றது சர்ச்சையானது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அந்த குற்றவாளி திமுக தொண்டர் என தெரிய வந்ததும்,முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் மத்தியில் கோரிக்கை எழுந்தது.அதன் அடிப்படையில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட  40 பேர் மீது கலகம் செய்ய தூண்டுதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கைது செய்யப்பட்ட அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை காவல்துறையிடம் பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.