கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டசபைத் தொகுதியில் அதிமுக வேட்ப்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.
அதேபோல வேதாரணியம் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ஓ எஸ் மணியன் 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்த இரண்டு வழக்குகளையும் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்குகள் தொடர்பாக அதிமுக சட்டசபை உறுப்பினர்கள், ஓ எஸ் மணியன் மற்றும் அசோக்குமார் அதோடு தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதேபோல இதற்கு முன்னதாக திமுக சார்பாக வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் துரைமுருகன் மற்றும் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு குறித்து துரைமுருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அதோடு தேர்தல் அதிகாரி தமிழக தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது அனைவரும் அறிந்தது தான்.