Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கதறி அழுத அதிமுக எம்.எல்.ஏ… கண்ணீர் விட்டு குமுறிய ஆதரவாளர்கள்… ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு…!

Thoppu Venkatachalam

Thoppu Venkatachalam

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதில் இருந்தே அக்கட்சியில் விதவிதமான பிரச்சனைகள் அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக மூத்த அமைச்சர்கள் 3 பேர், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கு சீட் மறுக்கப்பட்டது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. அமமுகவிற்கு தாவிய எம்.எல்.ஏ. ராஜவர்மன், அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் என பலரும் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு சீட் வழங்கப்படாதது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து தோப்பு வெங்கடாசலம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.

கூட்டத்தில் பேசிய தோப்பு வெங்கடாசலம், ‘விஸ்வாசமாக பணியாற்றிய என்னை எச்சிலை துப்புவது போல தூக்கி போட்டுவிட்டீர்கள். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் தனக்கு சீட் வழங்க கூடாது என்பதற்காக உழைத்ததை விட திருப்பூர் பாராளுமன்ற தேர்தலில் உழைத்திருந்தால் எம்.எஸ்.ஆனந்தனை வெற்றி பெற வைத்திருக்கலாம்’ என தெரிவித்தார். இந்த தேர்தலில் எனக்கு வாய்ப்பாளிக்காததற்கு காரணம் கேட்டால் உட்கட்சி அரசியல் என முதலமைச்சர் பதில் கொடுத்ததாகவும் கூறினார்.

இந்த நிலை என்னோடு போகட்டும் இனி எந்த அதிமுக தொண்டனுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது. நான் என்ன தவறு செய்தேன், எனக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை எனக்கூறிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட்டு குமுறி அழ ஆரம்பித்தார். அவர் கண்கலங்குவதை பார்த்த அவருடைய ஆதரவாளர்களும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதற ஆரம்பித்தனர்.

Exit mobile version