Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓபிஎஸின் வருகையால் ஸ்தம்பித்து போன மதுரை விமான நிலையம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்ற பிறகு நேற்று முதல் முறையாக மதுரைக்கு வந்தார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ். இதன் காரணமாக, அவருக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பு வழங்கும் விதத்தில் பிரம்மாண்ட வரவேற்பினை அதிமுகவினர் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், பன்னீர்செல்வத்துடன் வந்த வாகனங்கள் வெளியே செல்லும் வழியில் இருபுறமும் மற்ற வாகனங்கள் செல்லாமல் அணிவகுத்து நூற்றுக்கணக்கான கார்கள் நின்றுகொண்டு இருந்தனர். மேலும் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வாயிலிலும் அதிமுகவின் கார்கள் அணிவகுத்து நின்று கொண்டு இருந்திருக்கின்றன. இதன் காரணமாக, விமான நிலையம் செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு உண்டானது. விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல இயலாமலும், வெளியில் இருந்து விமான நிலையம் செல்ல முடியாமலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதி அடைந்து இருக்கிறார்கள்.

அதே போல விமான நிலையத்திற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வாயிலிலும் அதிமுகவின் தொண்டர்கள் திரண்டு நின்றதால், செல்ல முடியாமல் திக்கித் திணறி சென்றார்கள். தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்க வருகைதந்த பன்னீர்செல்வம் தொண்டர்களுடன் உற்சாக போஸ் கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஒன்றுதிரண்ட அதிமுகவின் தொண்டர்களால் போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறையினர் மிகவும் திணறிப் போனார்கள். அதோடு மட்டுமல்லாமல் அதிமுக வாகனங்களுக்கு இடையில் காவல்துறையினரின் வாகனமும் சிக்கிக் கொண்டது என்று சொல்லப்படுகிறது.

அதிமுக தொண்டர்கள் அளித்த வரவேற்பின் காரணமாக, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்து பயணிகள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி போயினர். இனி வரும் காலங்களில் அரசியல் கட்சியினர் வரவேற்பு வழங்கினால் விமானநிலையம் வெளியே இருக்கும் பெருங்குடி பகுதிகளில் வரவேற்பு வழங்கினால் பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் சிரமம் இல்லாமல் செல்ல இயலும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..

Exit mobile version