தமிழக சட்டசபை நிகழ்ச்சிகள் நோய் தொற்று பரவல் காரணமாக, தற்காலிகமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் அடுத்த மாதம் கூட்டத்தொடரை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கின்ற சட்ட சபை மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு கோட்டையில் இருக்கின்ற சட்டசபையில் கூட்டத்தொடரை நடந்தால் அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக தொழில்நுட்ப நடவடிக்கைகளையும் சட்டசபை செயலகம் முன்னெடுத்து வருகின்றது. நேரலை ஒளிபரப்பு நவீனமயமாக்கல் தொடர்பாகவும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்காக சட்டசபையில் சில மாற்றங்கள் கொண்டு வரலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்ததாக தெரிகிறது, இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டசபை செயலாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மற்றும் சட்டசபை உயரதிகாரிகள் பங்கேற்றார்கள்.
எதிர்வரும் 2022ஆம் வருடத்திற்கான ஆளுநர் உரை கூட்டத்தொடரை ஜனவரி மாதம் கோட்டையில் இருக்கின்ற சட்ட சபை மண்டபத்தில் நடத்துவதற்காக நடைபெறும் பூர்வாங்க பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அத்துடன் நேரடி ஒளிபரப்பாக சட்டசபையிலும் மேற்கொள்ளவேண்டிய நவீன தொழில்நுட்பங்களை இணைக்கும் பணியில் இருக்கின்ற முன்னேற்றம் தொடர்பாகவும், ஆலோசிக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் இருந்து இதுவரையில் கவர்னரின் நிதிநிலை அறிக்கை காண உரை மட்டுமே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. ஆனால் முதன்முறையாக ஒட்டுமொத்தமாக அவை நடவடிக்கையை இனி நேரடி ஒளிபரப்பு கொண்டுவரும் சூழல் ஏற்பட்டு இருப்பதால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரு சட்ட சபை உறுப்பினரின் பேச்சு அவை மரபிற்கு எதிராக இருந்து அதை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டால் அதை நீக்கிய நேரத்திற்கு பிறகு ஏதாவது தொலைக்காட்சி சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் அந்த பேச்சை மீண்டும் ஒளிபரப்புவதை கண்காணிக்கும் விதத்திலும் அதை முறைப்படுத்தவும், கொண்டு வரப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நேரடி ஒளிபரப்பை சட்டசபையின் இணையதளத்தின் மூலமாகவும் காணலாம் என்று சொல்லப்படுகிறது, அதோடு நேரடி ஒளிபரப்பு குறித்து தூர்தர்ஷன் நிறுவனத்துடனும் சட்டசபை செயலகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.