Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆப்கானிஸ்தான் விரைவில் விடுதலை பெறும்! முன்னாள் ராணுவ தளபதி சூளுரை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 வருட காலமாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கடுமையான தாக்குதலை நடத்தி அந்த நாட்டை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

அந்த விதத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்த ஆப்கானிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத் தாலிபான்களுக்கு எதிராக புதிய போர் ஆரம்பிக்கப்படும் என்று சூளுரை செய்திருக்கிறார்.

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் ஒன்றிணைந்து போருக்கு தயாராகி வருகிறோம் என்றும், அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு போர் ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து விடுவிக்கப்படும் அங்கே ஒரு ஜனநாயக அமைப்பு மறுபடியும் நிறுவப்படும்.

அதனை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் தாலிபான்களுக்கு எதிரானவர்களல்ல ஆப்கானிஸ்தான் அனைவருக்கும் பொருந்தக்கூடிய நாடாக இருக்கவேண்டும், தலைவர்களுக்கு மட்டும் ஒரு நாடாக ஆப்கானிஸ்தான் இருக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version