டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக சமீபத்தில் பதவியேற்றார் என்பது தெரிந்ததே. பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளை அவர் வீழ்த்தி மீண்டும் பதவியை பெற்றுள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் பெண்கள் வாக்குகள் ஒட்டுமொத்தமாக அவருக்கு கிடைத்தது தான்
பெண்களுக்கு அவர் பல்வேறு சலுகைகளை வழங்கினார். குறிப்பாக மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பது அனைத்து பெண்களையும் ஒட்டுமொத்தமாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தது பெண்களுக்கான இலவச பயணம் திட்டம் தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியை அடுத்து மேலும் சில மாநிலங்களில் இலவச பேருந்து பயணம் குறித்த திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் இந்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார். தெலுங்கானா உள்பட மேலும் ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் கெஜ்ரிவாலின் திட்டம் இந்தியா முழுவதும் பரவ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது