மத்திய அரசின் அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு சாதகமா? பாதகமா?

0
255
Agnipath Scheme

மத்திய அரசின் அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு சாதகமா? பாதகமா?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டம் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பரவலாக வந்து கொண்டே இருக்கிறது.அதே நேரத்தில் வட மாநிலங்களில் இதை எதிர்த்து வன்முறைகளும் நடந்து வருகிறது.

அக்னிபத் திட்டத்தை பற்றி ஆராயும் முன் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பற்றி ஓரளவு ஆராய வேண்டும்.கடந்த பல ஆண்டுகளாக 3 வருட கலை அல்லது அறிவியல் கல்லூரியில் பட்டபடிப்பு படித்து வெளியேறும் மாணவர்களும்,4 வருட பொறியியல் படித்து விட்டு வெளியேறும் மாணவர்களும் தான் சார்ந்த துறையில் எதுவும் அறியாத நிலையில் தான் இருக்கின்றனர்.

இப்படி வெளியேறும் இளைஞர்கள் அடுத்து வேலைக்காக என்ன செய்ய வேண்டும்,எப்படி முயற்சிக்க வேண்டும் என்று எதுவுமே அறியாமல் பொறியியல் படிப்பு முடித்தவர்கள் உணவு டெலிவரி செய்யும் வேலையையும்,அதே பொறியியல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு வேலை என்பதற்காக துப்புரவு மற்றும் டிரைவர் பணிக்கும் கூட விண்ணப்பிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

மேற்குறிப்பிட்ட பணிகள் எதையும் தரக்குறைவாக குறிப்பிடவில்லை.ஆனால் அந்த பணிக்கென கல்வித் தகுதி அதிகபட்சமாக 10 ஆம் வகுப்பு என்று நிர்ணயித்துள்ள நிலையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிப்பது ஏன்? அவர்கள் 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியில் உள்ள ஒருவரின் வேலை வாய்ப்பை பறிப்பதாக தான் எடுத்துக் கொள்ள முடியும்.

அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை ஐடி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்கள் கிடைக்காமல் போராடி வருகின்றனர்.ஒரு பக்கம் பொறியியல் படித்தவர்கள் வேலை இல்லாமல் அலைந்து வருகின்றனர்.இரு தரப்புக்கும் இடையே உள்ள இடைவெளி வேலைக்கு தகுதியான திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.உலகிலேயே இளைஞர்களை அதிகமாக கொண்டது இந்தியா தான்,அதே போல அதிக அளவில் வேலையில்லாத இளைஞர்களை கொண்டதும் இந்தியாவாக மட்டுமே இருக்க முடியும்.

இந்த சூழலில் இந்திய இராணுவத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி கொடுத்த பின் இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத நபர்களை 15 ஆண்டுகள் முழு நேர பணிக்காக தேர்வு செய்து கொள்வது வரவேற்க வேண்டிய விசயமே.

இதில் பயிற்சி காலத்தில் இளைஞர்களுக்கு 30 முதல் 40 ஆயிரம் சம்பளம் கொடுத்து சில துறைகளில் பயிற்சி கொடுப்பது என்பது இந்திய இளைஞர்களை சோம்பேறியாக இருக்க விடாமல் வேலையை நோக்கி சிந்திக்க வைப்பதாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையே மத்திய அரசு உதவியுடன் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் செய்ய வழிவகை செய்தால் இந்தியா பொருளாதாரத்தில் அடுத்த நிலைக்கு செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது.

பாஜக கொண்டு வந்த திட்டம் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பதை விட இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து எதிர்க்கட்சிகள் செயல்படலாம்.

அதே நேரத்தில் மத்திய அரசும் இராணுவத்திற்கு மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இளைஞர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றும் வகையில் இதை மேலும் மேம்படுத்தலாம்.