தொகுதிக்குள் நுழைய கிளம்பிய எதிர்ப்பு! கொடுக்க வேண்டியதை கொடுத்த அதிமுக வேட்பாளர்

0
135
AIADMK Candidate Gave the Money to Women

தொகுதிக்குள் நுழைய கிளம்பிய எதிர்ப்பு! கொடுக்க வேண்டியதை கொடுத்த அதிமுக வேட்பாளர்

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் செய்வது முடிவடைந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.ஆளும் அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும்,கடந்த 2 முறையும் ஆட்சியை கோட்டை விட்ட திமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்காக இருகட்சிகளும் வழக்கம் போலவே மக்களை கவர பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.இவர்கள் அறிவிக்கும் இந்த கவர்ச்சி திட்டங்களுக்கு பெரும்பாலான மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும்,ஒரு சில இடங்களில் எதைக் கொடுத்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்சியை தொடர்ந்து எதிர்க்கும் சூழலும் உருவாகியுள்ளது.அந்த வகையில் அதிமுக வேட்பாளர் ஒருவருக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்ப அவரும் தங்களுடைய வழக்கமான பாணியில் அந்த மக்களை கவனித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.ப.கிருஷ்ணன் அந்த தொகுதியில் தொடர் தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பிரச்சாரத்திற்கு போகும் இடமெல்லாம் தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. குறிப்பாக தொகுதிலுள்ள பல இடங்களில் அவரை ஊருக்குள்ளேயே விடவில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீரங்கம் நகர பகுதியில் அவருக்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறுகின்றனர்.

குறிப்பாக அந்த பகுதியிலுள்ள பெண்கள் கடந்த 30 ஆண்டுகளில் எங்களுக்கு என்ன செய்து விட்டீர்கள். மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நிகழ்வின் போது பணத்தை மூட்டையை கட்டி ஆற்றில் கொட்டிய நீங்கள் எங்களுக்கு என்ன நன்மை செய்துவிட போகிறீா்கள் என்றெல்லாம் தொடர்ந்து கேள்விகளை கேட்டுள்ளனர்.

இதனால் அந்த பகுதி மக்களின் மனநிலையை சரியாக அறிந்து கொண்ட அதிமுக வேட்பாளர்  கு.ப.கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அந்த மாநகர பகுதியில் தங்களுடைய வழக்கமான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். அதில் எதிர்ப்பு தெரிவித்த பெண்களுக்கு புடவையும் , புடவைக்குள் ஆயிரம் ரூபாய் பணமும் வைத்து கொடுத்துள்ளார். அதோடு வாக்களிக்க பூத் சீட்டு கொடுக்கும் போது மேலும் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பகுதியில் ஏற்பட்ட எதிர்ப்பை வழக்கம் போல தங்களுடைய டெக்னிக்கை பயன்படுத்தி சுலபமாக சமாளித்துள்ளார்.இதில் அதிமுக அல்லது திமுக என பாரபட்சம் பார்க்காமல் இரண்டு தரப்பும் இந்த தேர்தலில் மக்களுக்கு பணத்தை வாரி வழங்க தயாராகிவிட்டது என்றே தெரிகிறது.தேர்தல் ஆணையம் எவ்வளவு தான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் கொடுப்பவர்களும்,வாங்குபவர்களும் நினைத்தால் மட்டுமே இதை நிறுத்த முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.