தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு; இன்று வேட்பு மனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் உறுதியானதால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு களமிறங்கியுள்ளார். ஒபிஎஸ் தரப்பில் போட்டியிட இருந்த செந்தில்முருகன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம் என்று தெரிவித்தனர். இதனால் அதிமுக தொண்டர்களிடையே இருந்த குழப்பம் நீங்கி அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது தென்னரசு தான் என்று உறுதியானது. இதனையடுத்து இன்று காலை முதல் அதிமுக வேட்பாளர் தென்னரசு தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கேவி ராமலிங்கம் மற்றும் அதிமுகவினர் இணைந்து அப்பகுதியில் இருந்த ஒரு கோவிலில் சாமி வழிபாடு செய்து விட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மணல்மேடு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. இன்று பகல் 12 மணிக்கு தென்னரசு வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.