Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆளுங்கட்சியை கண்டித்து 9ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்! அதிமுக தலைமை கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட சூழ்நிலையிலும், தேர்தல் சமயத்தில் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொதுமக்களின் அன்றாட தேவைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதிலும் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறிதும் அக்கறை காட்டாமல் ஆட்சி நடந்து கொண்டு இருப்பதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு மேலும், மேலும் சுமைகளை ஏற்றும் தமிழக அரசின் செயல்களை அதிமுக வன்மையாக கண்டிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் மறு பயிர் சாகுபடிக்கு என்று ஏக்கருக்கு 12,000 ரூபாய் வழங்கப்படவேண்டும், கரும்பு பருத்தி கிழங்கு வகைகள் தோட்டப்பயிர்கள் வாழை என்று மற்றொரு வகை விளைச்சலை இழந்தோருக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பொங்கல் விழாவை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் எல்லோருக்கும் ரொக்கமாக உதவி தொகை கொடுப்பது இன்று நிலவிவரும் நோய்த்தொற்று சூழ்நிலையில், மிகவும் இன்றியமையாததாக இருக்கும் மழை வெள்ள பாதிப்புகளையும், நோய்கள் உண்டாகி இருக்கும் வேலை இழப்புகளையும், உற்பத்தி வீழ்ச்சியையும், விலைவாசி உயர்வையும், கருத்தில் வைத்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக்குகளை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. இது மிகவும் தவறான மனிதாபிமானம் அற்ற முன்யோசனை இல்லாத முடிவு என்று கண்டிக்கிறோம் என தெரிவித்து உள்ளது அதிமுக தலைமை.

தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, எல்லாவிதமான பொருட்களின் விலைகளும் உயர்ந்து பொதுமக்களின் அன்றாட வாழ்வில் மிகப் பெரிய இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை திமுக அரசு உடனடியாக சரி செய்திட வேண்டும். கனமழை பெரிய வெள்ளம் புயல் உள்ளிட்ட பேரிடர் காலமானாலும் சரி, நோய்த்தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோதும் சரி, தங்களுடைய உயிரை துச்சமென மதித்து அல்லும் பகலும் அயராமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள் உட்பட எல்லோருக்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் பொதுமக்கள் நலன் காக்கும் பல்வேறு உதவிகளையும் செய்ய தவறி வரும் திமுக அரசை கண்டித்தும், பொது மக்களுக்கு உண்டாகியிருக்கும் துயரங்களுக்கு தீர்வு காண வலியுறுத்தியும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 9ஆம் தேதி காலை 10 .30 மணி முதல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version