Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடக்கிறது அதிமுகவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! எடுக்கப்போகும் முடிவு என்ன?

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜூன் மாதம் 27ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தலைமை கழகம் எம்ஜிஆர் மாளிகை கூட்ட அரங்கில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் எல்லோரும் பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஓபிஎஸ், இபிஎஸ், உள்ளிட்டோர் பெயர் இல்லாமல் தலைமை கழகம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக ஒற்றை தலைமை விவகாரத்தில் எழுந்த உள் கட்சி மோதலை தொடர்ந்து மாவட்டங்களில் இருக்கின்ற அதிமுகவின் கட்சி அலுவலகங்களிலிருந்து பன்னீர்செல்வம் படம் நீக்கப்பட்டு வருகிறது.

ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மிகப்பெரிய சலசலப்பு நடந்து முடிந்தது.

அந்தக் கூட்டத்தில் பெரும்பாலான செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்ததன் காரணமாக, பன்னீர்செல்வத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதன் காரணமாக, கூட்டத்திலிருந்து பாதியிலேயே அவர் அவருடைய ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

அதோடு அன்றைய தினம் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றவேண்டிய அனைத்து தீர்மானங்களும் பொது குழு உறுப்பினர்களால் ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒரு தலைமையைத் தேர்வு செய்ததற்காக பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் 11ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கூட்டத்திலேயே நிரந்தர அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தலைமை கழகம் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே பன்னீர்செல்வம் தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னுடைய ஆதரவாளர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கு நடுவே தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.

ஆகவே இன்று பெரியகுளத்திலிருந்து தன்னுடைய ஆதரவாளர்களை பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில், அவர் மறுபடியும் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். இன்று மதியம் மதுரையில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு பன்னீர்செல்வம் பயணம் செய்யவிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

Exit mobile version