அதிமுக யாருக்கு? இன்று வெளியாக போகும் அதிரடி தீர்ப்பு?

0
117

அதிமுகவின் பொதுக்குழுவானது கடந்த ஜூன் மாதம் கூட்டப்பட்டது, அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்ட பதவிகள் நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுக்குழுவை எதிர்த்து அந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆகவே இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திருப்பியனுப்பியது. இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தனர். பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், வழக்கறிஞர் எஸ் ஆர் ராஜகோபால் அதிமுகவின் நிர்வாகிகள் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத், உள்ளிட்டோர் ஆஜராகி வாதம் செய்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பதிலளித்து பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீ ராம், உள்ளிட்டோர் வாதம் செய்தனர்.

இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் தொடர்ச்சியாக 2 தினங்கள் கேட்டறிந்த பிறகு இந்த வாதங்கள் முடிவடைந்தது. இந்த நிலையில், சென்ற 11ஆம் தேதி இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.

வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் வழங்க விரும்பினால் அதனை வழங்கலாம் எனவும் நீதிபதி கூறியிருந்தார். பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையேயான அதிகாரப்போட்டி பொதுக்குழு அறிவிப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்கு மேலாக பரபரப்பாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பொதுக்குழுவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகவே வழக்குகள் விசாரணை பட்டியலில் இந்த வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்ற தகவல் இதுவரையில் இடம்பெறவில்லை.

ஆனாலும் வழக்கு விசாரணை பட்டியலில் இறுதி சமயத்திலும் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளது என்ற காரணத்தால், இந்த சமயத்திலும் தீர்ப்பு வெளியாகலாம். இந்த தீர்ப்பு வெளியான பின்னர் தான் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கிடையிலான கட்சி தலைமை போட்டிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.