Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக தலைமை அலுவலக மோதல் விவகாரம் – அவையில் காரசார விவாதம்!!

#image_title

அதிமுக தலைமை அலுவலக மோதல் விவகாரம் – அவையில் காரசார விவாதம்!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் காவல்துறை முறைப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 32 ஆண்டு காலம் அதிமுக தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட இயக்கம் அதிமுக என்றும், தலைமைக் கழகத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு கும்பல் தாக்கியதாகவும், இதுபோன்ற சம்பவம் நடைபெறும் என்று ஏற்கனவே காவல்துறையிடம் புகார் அளித்து தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது, ஆனால் தகுந்த பாதுகாப்பு வழங்காததால் இது போன்ற நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், இது உட்கட்சி விவகாரம் எனவும், பாதுகாப்பு கேட்டவுடன் பாதுகாப்பு கொடுத்ததாகவும், வெளியில் முழுவதுமாக பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை வேறு திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், அன்று நடந்த சம்பவம் வேதனை அளிக்க கூடியதாக உள்ளதோடு, நாங்கள் நிராயுதபாணியாக அதிமுக தலைமை அலுவலகம் சென்றதாகவும், தலைமை கழகத்திற்கு பூட்டு போட்டு பூட்டிவிட்டு 300 பேர் நாற்காலி போட்டு வீதியில் அமர்ந்திருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அப்போது மிகப்பெரிய கும்பல் கல்லை எங்கள் கார் நோக்கி எரிந்ததாக குறிப்பிட்ட அவர், அந்த கலவரம் யார் மூலம் நடைபெற்றது என்பதை காவல்துறை விசாரித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்,
அப்போதுதான் யார் வன்முறையாளர்கள் யார் அத்துமீறியது என்று மக்களுக்கு தெரிய வரும் எனவும், இது குறித்து தனியாக மேடை போட்டு பேசவும் தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, இதுபோன்ற சம்பவம் நடைபெறும் என அறிந்து ஏற்கனவே காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும், தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம் என்றும், தக்க பாதுகாப்பு வழங்கியிருந்தால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என கூறினார்.

மேலும், யார் உள்ளே வந்தார்கள் யார் தாக்கப்பட்டார்கள் என வீடியோ ஆதாரம் பதிவு செய்து நீதிமன்றத்திடம் தாக்கல் செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தலைமைக் கழகத்தில் உள்ள பொருட்களை திருடி சென்று இருக்கிறார்கள் அதன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிமன்றம் இந்த சம்பவம் குறித்து விசாரித்திருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து 16 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், காவல்துறை முறையாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல் என கூறினார். மேலும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்ததாக கூறினார் . இதையடுத்து விவாதம் முடிவுக்கு வந்தது.

Exit mobile version