அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்யும் அண்ணாமலை!! விரைவில் டிவிஏசி வரும்!!

0
193
#image_title

அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்யும் அண்ணாமலை!! விரைவில் டிவிஏசி வரும்!!

நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னரே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசி ஹிந்து மக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினரின் கடும் கோபத்திற்கு ஆளானார்.அவரின் சனாதன தர்மம் குறித்த ஆணவப் பேச்சுக்கு பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.இந்நிலையில் அவர் தொடங்கி வைத்த இந்த விவகாரம் இன்று 2 கட்சிகளின் கூட்டணி முறியும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மாநிலம் முழுவதும் பாதையாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.இதனிடையே அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர் திமுக மற்றும் அதிமுக குறித்து பல கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு அறிஞர் அண்ணா குறித்து பேசி அண்ணாமலை புது சர்ச்சையை கிளப்பினார்.கூட்டத்தில் பேசிய அண்ணாமலை “1956 ஆம் ஆண்டு தமிழ் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட அறிஞர் அண்ணா பகுத்தறிவு கருத்துக்களை பேசினார்.இதனை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கடுமையாக சாடினார்.மன்னிப்பு கேட்காவிட்டால் மீனாட்சி அம்மனுக்கு பாலுக்கு பதில் ரத்தத்தில் தான் அபிஷேகம் நாடக்குமென்று எச்சரித்ததாகவும் அதற்கு பயந்து அறிஞர் அண்ணா ஓடி வந்து மன்னிப்பு கேட்டார்” என்று அண்ணாமலை கூறினார்.

அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சு அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் “அதிமுகவை பொறுத்தவரை அனைத்து மதங்களும் சமம்.அறிஞர் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கூற்றுப்படி அதிமுக உருவாகியது.ஹிந்து மக்களின் தயவால் தேர்தலில் வெற்றி பெற்று விட்டு அந்த நன்றி கூட இல்லாமல் இன்று அவர்களின் மத நம்பிக்கையை அவமானப்படுத்தி இருக்கிறது ஆளும் திமுக.சனாதனம் குறித்த அவர்களின் பேச்சை கண்டிக்காமல் திமுகவை காப்பற்றுவதற்காக அறிஞர் அண்ணா குறித்து பேசி மக்களின் மனதை திசை திருப்ப தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முயற்சிக்கிறார்.நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல் புதிது புதிதாக தலைவர்கள் உருவாகிறார்கள்.அரசியல் குறித்த அனுபவம் என்பது கடுகளவும் இல்லை” என்று பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடினார்.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும் என்று தனது பங்கிற்கு கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக “அண்ணன் சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன் ஒரு பேச்சு.. 6 மணிக்கு மேல் ஒரு பேச்சு என்று இருப்பார்” என செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கலாய்த்து பேசினார்.இதனை தொடர்ந்து பேசிய அவர் “கூட்டணி தேவை அனைவருக்கும் இருக்கு.இங்கும் டிவிஏசி இருக்கு.அனைவரும் ஏதோ ஒரு தேவைக்காக தான் கூட்டணி அமைத்திருக்கோம்.தனி மரம் எப்பொழும் ஒரு தோப்பாகாது.ஒன்று பட்டு தான் செயல்பட வேண்டும்.அனுசரிப்பு இருக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகளுக்கு டிவிஏசி மீது அச்சம் இருக்கும்.டிவிஏசி என்று சொன்னாலே அவர்கள் வயிற்றில் புளியை கரைத்து விடும்” என்றார்.

மேலும் டிவிஏசி பற்றி பேசி அதிமுகவின் கூட்டணி வேண்டும் என்பதற்காக பகிரங்கமாக மிரட்டுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு “டிவிஏசி என்னுடைய கட்டுப்பாட்டிலா இருக்கு.நான் சொல்லித்தான் டிவிஏசி செயல்படுகிறதா?” என்று நக்கலாக பதில் அளித்தார்.திமுகவை தொடர்ந்து அதிமுகவின் முக்கிய புள்ளிகள் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்திடம் (டிவிஏசி) சிக்க போகிறது என்பதை மறைமுகமாக எச்சரித்தார் அண்ணாமலை.

இந்நிலையில் அண்ணா குறித்த அண்ணாமலையின் சர்ச்சை கருத்திற்கு அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் பாஜக உடனான கூட்டணியை முறித்து கொள்கிறோம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுகவின் இந்த நிலைப்பாடு தேர்தல் வரும் வரை மட்டுமே.நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பாஜக – அதிமுக மீண்டும் கூட்டணி வைத்து கொள்ளும்.இது ஒரு கபட நாடகம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அண்ணாமலை கூறியது போல் அதிமுகவின் முக்கிய புள்ளிகளின் இடங்களில் டிவிஏசி ரெய்டு விரைவில் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.