விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!
மதுரையில் நடைபெற உள்ள அஇஅதிமுக கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதற்குத் தென் தமிழகத்தின் அரசியல் தலைநகரமாக விளங்கும் மதுரையை மாநாடு நடத்த தேர்ந்தெடுத்து உள்ளனர்.
மதுரை மாவட்டம் வளையங்குளத்தில், மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாநாட்டை எப்படி நடத்துவது எவ்வாறு நடத்துவது இந்த மாநாட்டின் மூலம் மக்கள் செல்வாக்கை எப்படி பெருக்குவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கழக நிர்வாகிகள் பல கட்டங்களாக மேற்கொண்டனர்.
மாநாடு நடத்த மதுரை மாவட்டத்தை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தான் என்று சொல்லப்படுகிறது. எடப்பாடியாரின் செல்வாக்கையும் தொண்டர்களின் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக மதுரையில் மாநாடு நடத்தப்படுவதாக அதிமுகவினர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாடு நடத்த பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும், இந்த மாநாட்டிற்கு அதிமுக-வை சேர்ந்த அனைத்து கட்ட மாவட்ட மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் பாடுபட்டு உழைத்து வருகின்றனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக சிறப்பாக நடைபெற்று வந்தாலும், தமிழக காவல்துறை தரப்பில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அதிமுகவினர் மத்தியில் உள்ளது. எனவே 1,500 தனியார் பாதுகாவலர்களை கொண்டு மாநாடு நடத்த அதிமுகவினர் திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.