அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’…

0
121

அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’…

 

 

ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மதுரை கள்ளழகர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.

 

மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று அழகர் கோவில் தேரோட்டம்.இதன்படி ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஆடி பெருந்திருவிழா கடந்த 24 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து 10 நாட்கள் ஆலயத்தில் விழா நடைபெறும் நிலையில் ஒவ்வொரு நாளும், அன்னம், கருடவாகனம், சேஷ வாகனம், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் காட்சி அளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேரோட்டம் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கள்ளழகர் ஸ்ரீதேவி,பூதேவி தாயாருடன் சமேதராக பவனி வந்தார்.மேலும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ள அழகரின் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.மக்கள் கூட்டம் அலைகடலெனத் திரளத் திருவிழாவானது தற்போது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் விழாவிற்கு வருகை புரியும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

மேலும் பக்தர்கள் அனைவரும் கண்டுகளிக்க கள்ளழகர் கோயில் தேரோட்ட நிகழ்வு அங்கங்கே திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.