உயிருக்கு போராடும் எதிர்கட்சித் தலைவர்! இரண்டு நாள்களில் இறந்து விடுவார் என டாக்டர்கள் எச்சரிக்கை…!

0
138
alexy navalni

உயிருக்கு போராடும் எதிர்கட்சித் தலைவர்! இரண்டு நாள்களில் இறந்து விடுவார் என டாக்டர்கள் எச்சரிக்கை…!

ரஷ்ய நாட்டின் அதிபர் விலாடிமிர் புதின் அசைக்க முடியாத சக்தியாக அந்நாட்டில் இருந்து வருகிறார். யார் என்ன சொன்னாலும், அவரே அதிபராகவும், பிரதமராவகும் மாறி மாறி, அனைத்து ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்டு மிகப்பெரிய சக்தியாக அந்நாட்டை ஆண்டு வருகிறார்.

அவருக்கு மிகவும் குடைச்சல் கொடுக்கும் நபராக எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி இருக்கிறார். புதினுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய நாவல்னிக்கு, கடந்த ஆண்டு காபியில் விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பிறகு ஆபத்தான நிலையில் இறக்கும் நிலைக்கு சென்ற அவர், ஜெர்மனியில் சிகிச்சை பெற்று தாயகம் திரும்பியபோது, புதின் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஏற்கனவே நிதி முறைகேடு புகாரில் நாவல்னிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு, பின்னர் தண்டனை இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை தூசி தட்டிய அதிகாரிகள், விதிமீறல் செய்ததாகக் கூறி விமான நிலையத்திலேயே அவரை கைது சிறையில் அடைத்தனர்.

அதிபரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாவல்னி ஆதரவாளர்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளும் நாவல்னியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் விலாடிமிர் புதின் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில், கடும் முதுகு வலி மற்றும் கால் உணர்விண்மையால் அவதிப்பட்டு வரும் அலெக்சி நாவல்னி, உரிய சிகிச்சை அளிக்கப்படாததைக் கண்டித்து, சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து 18வது நாளாக உண்ணாவிரத்தத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அவரது ரத்தத்தை ஆய்வு செய்த மருத்துவர்கள், நாவல்னிக்கு ஏற்கனவே மாரடைப்பு மற்றும் கிட்னி செயலிழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். நாவல்னியின் ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு, அளவுக்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

ஏற்கனவே, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு கடிதம் எழுதியும், அதனை சிறைத்துறையினர் மதிக்கவே இல்லை. உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், ஓரிரு நாட்களில் அவர் இறந்து விடுவார் என்றும் எச்சரித்துள்ளனர்.

அதே நேரத்தில், மருத்துவர்களுடன் இணைந்து எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள் உட்பட70க்கும் மேற்பட்டோர் கையெழுட்டு, நாவல்னிக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிபர் புதினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்களது குரலுக்கு மதிப்பளித்து, சிகிச்சை அளிக்க புதின் அனுமதி அளிப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு எதிர்கட்சித் தலைவர் இவ்வளவு கொடுமை அனுபவித்து வரும் நிலையில், பெரும்பாலான நாடுகள், குறைந்தபட்சம் அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என, வார்த்தைக்குக் கூட கூறவில்லை என்பது வேதனையின் உச்சமாக உள்ளது.