அனைத்து வரிகளும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்!! தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கணினி மயமாக்கப் பட வேண்டும். இதன் மூலம் அனைத்து விதமான அனுமதிகளும், வரிகளும் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சி ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார். இதை பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அவர் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.
ஊரக பகுதிகளில் உள்ள மனை பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிடத்திற்கான அனுமதி, தொழிற்சாலை தொடங்க, மற்றும் தொழில் செய்வதற்கான அனுமதி என அனைத்து அனுமதிகளும் ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் மூலமே அனுமதி பெற முடியும். மேலும் தற்போது, கிராப்புற ஊராட்சிகளில் பொது மக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி என அனைத்து வரிகளும் ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது ஊராட்சி செயலாளர் மூலமாகவோ மக்கள் செலுத்துகிறார்கள்.
ஆனால் இப்போது இந்த அனைத்து வரிகளும் இணையதம் மூலமாக மட்டுமே செலுத்த முடியும். பொது மக்கள் தங்கள் வரிகளை http://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் செலுத்தலாம் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் வீட்டு வரி, தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், வரியில்லா வருவாய் இனங்கள் என அனைத்து கட்டிட அனுமதிகளுக்கும் http://online.ppa.tn.gov.in என்ற இணையதளத்தில் அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.