Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சமயபுரத்தில் அம்பிகையின் பச்சை பட்டினி விரதம்..!! நாமும் விரதம் இருந்து வழிபடும் முறை..!!

நாம் கேட்க கூடிய வேண்டுதல்களை வாரி வாரி கொடுக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஆற்றல் நிறைந்த தெய்வம் தான் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன். கண்ணுக்கு எதிரிலேயே நமக்கு நிதர்சனமாக காட்சி கொடுக்கக்கூடிய தெய்வமும் இந்த சமயபுரத்து மகமாயி தான். இந்த உலக மக்கள் பெரும்பாலும் தனது தாயைப் போன்று நினைத்து வழிபடக்கூடிய தெய்வமும் இந்த தெய்வம் தான்.

நமக்கு ஏதாவது ஒரு வேண்டுதல்கள் இருந்தால் மட்டுமே பட்டினியாக இருந்து விரதம் இருப்போம். ஆனால் இந்த உலக வழக்கத்தை அப்படியே மாற்றிய தெய்வம் என்றால் இந்த சமயபுரத்து மாரியம்மன் தான். ஏனென்றால் அந்த தெய்வத்தின் பிள்ளைகளாகிய, இந்த உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, பட்டினியாக இருந்து விரதம் இருக்க கூடியவள் இந்த தாய்.

தொடர்ந்து 28 நாட்கள் இந்த சமயபுரத்து மகமாயி நமக்காக விரதம் இருக்கும் முறைதான் பச்சை பட்டினி விரத முறை. பொதுவாக அனைத்து நாட்களிலும் இந்த தெய்வத்திற்கு நெய்வேத்தியமாக ஏதேனும் ஒரு பொருளை வைப்பார்கள். ஆனால் இந்த 28 நாட்களும் நெய்வேத்தியமாக எந்த ஒரு சமைத்த உணவையும் வைக்க மாட்டார்கள்.

அதற்கு பதிலாக பழங்கள், இளநீர் இது போன்றவை தான் வைக்கப்படும்.
இந்த விரத நாட்கள் ஆனது மாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து, பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடையும். இதில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா என்பது நடைபெறும். அம்பாள் விரதம் இருக்கக்கூடிய இந்த நாட்களில் அம்பாளை குளிர்விப்பதற்காக, இந்த உலக மக்கள் பூக்களை கொண்டு வந்து அம்பாளுக்கு கொடுக்கக்கூடிய இந்த முறை தான் பூச்சொரிதல் விழா.

இந்த 28 நாட்களுள் நம்மால் எப்பொழுது முடியுமோ, அப்பொழுது சென்று இந்த தெய்வத்தை வழிபட்டுக் கொள்ளலாம். ஒருவேளை கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே விரதம் இருந்தும் வழிபட்டுக் கொள்ளலாம். அம்பாள் விரதம் இருக்கக்கூடிய இந்த 28 நாட்களும் நம்மால் தொடர்ந்து விரதம் இருக்க முடியாது. அதற்கு பதிலாக பூச்சொரிதல் விழா நடக்கக்கூடிய ஞாயிற்றுக்கிழமை தோறும் நாம் அம்பாளுக்காக விரதம் இருக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் அம்பாளுக்கு உகந்த நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு இது போன்ற நாட்களில் விரதம் இருந்து கொள்ளலாம். இந்தக் கிழமைகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள், செவ்வாய்க்கிழமையில் விரதம் இருக்கலாம். நமக்காக அந்த சமயபுரத்து மாரியம்மன் விரதம் இருக்கும் சமயத்தில், நாமும் சேர்ந்து விரதம் இருக்கும் பொழுது அதற்கான பலன் இரட்டிப்பாக நமக்கு கிடைக்கும்.

விரதம் இருக்கும் பொழுது நமது வீட்டில் சமயபுரத்து மாரியம்மன் புகைப்படம் இருந்தால், அதற்கு செவ்வருளி பூவினால் அலங்காரம் செய்து, ஒரு மஞ்சள் நிற துணியில் 11 ரூபாய் முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மனதார நமக்கு என்ன வேண்டுமோ அதனை வேண்டிக் கொண்டு, அந்த 11 ரூபாயை அம்பாளின் பாதத்தில் வைத்து விட வேண்டும். அம்பாளின் படம் இல்லை என்றாலும் ஒரு விளக்கினை ஏற்றி வைத்து, அம்பாளை நினைத்து இந்த 11 ரூபாயை வைத்து விடலாம். உணவு உண்ணாமல் விரதம் இருக்க முடியும் என்பவர்கள் பழங்கள், இளநீர் இது போன்றவைகளை உட்கொண்டு மாலை 7 மணி அளவில் தனது விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

விரதத்தை முடிக்கும் பொழுது குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் நீங்கள் விரதம் இருந்தால், அம்பாளுக்கு நிறைய உதிரிப் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பூக்களால் அர்ச்சனை செய்யும் பொழுது அபிராமி அந்தாதி பாடல்களை ஒலிக்க செய்வது மேலும் சிறப்பை தரும்.

விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த விரத முறை நமக்கு எப்பொழுது தெரிய வருகிறதோ, அப்பொழுது இருந்து அசைவ உணவை தவிர்த்து விட்டு, காலை மாலை என இரு வேளைகளிலும் அம்பாளை நினைத்து விளக்கேற்றி வேண்டிக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.

Exit mobile version