ஈழத் தமிழர்களை கொடுமைபடுத்திய இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை..!!

0
158

ஈழத் தமிழர்களை கொடுமைபடுத்திய இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை..!!

ஈழப்போர் நடந்த காலகட்டத்தில் இலங்கை ராணுவம் பல்வேறு வகையில் தமிழர்களின் மீது கொடுமை நடத்தினர். இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த உள்நாட்டு போரில் புலிகளுக்கு எதிராகவும், அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது நிரூபிக்கப்பட்டதால், அவரை அமெரிக்காவில் நுழைய கூடாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் திடீர் உத்தரவை சற்றும் எதிர்பாராத இலங்கை அரசு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளை அழிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு எதிராக நடத்திய உச்சகட்ட போரில் இலங்கை ராணுவத்தினர் பல்வேறு பிரிவுக்கு தலைமை வகித்தனர். அதில் 58 வது இராணுவ பிரிவுக்கு தலைமை ஏற்று சவேந்திர சில்வா வழி நடத்தினார். இந்த போரின் கடைசி 30 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 பேர் கொல்லப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில், இலங்கையின் ராணுவ தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வா சமீபத்தில் அமெரிக்கா பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஈழப் போரின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராகவும் பல்வேறு கொடுமைகளை நடத்தி மனித உரிமை மீறலில் சவேந்திர சில்வா ஈடுபட்ட ஆதாரங்கள் ஐநா மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அமெரிக்காவிற்குள் சவேந்திர சில்வா நுழைய கூடாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் “மைக் பாம்பியோ” முக்கிய உத்தரவை அதிரடியாக பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில்: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ஈழப் போரில் பல்வேறு மனித உரிமை மீறல்களை செய்துள்ளார். இது மிகப்பெரும் குற்றம் என்பதால் அவரை அமெரிக்காவில் நுழையத் தடை விதிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக இலங்கை வெளியுறவுத் துறையின் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் சவேந்திர சில்வாவை பற்றிய உண்மை செய்திகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், எங்கள் நாட்டு ராணுவ தளபதியை தீர்மானிக்கும் அதிபரின் சிறப்பு உரிமை மற்றும் அதிகாரத்தை அமெரிக்கா கேள்வி கேட்டது வருந்தத்தக்கது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.