கடந்த 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் 3 முறை வென்றுள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார். ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் சோனியா காந்தி 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.
ரே பரேலி தொகுதியில் வழக்கமாக போட்டியிடும் சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் புதிய வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க உள்ளது.
பெரும்பாலும் பிரியங்கா காந்தி இந்த முறை ரே பரேலி தொகுதியிலும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்த நிலையில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்புக்கு பாஜகவின் தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பாஜகவினர் எதிர்பார்த்தது போலவே தினேஷ் சிங் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு சோனியா காந்தி எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.