Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜகவின் இருபெரும் தலைவர்களின் தமிழக வருகை! சூடு பறக்கும் தமிழக அரசியல் களம்!

தமிழ்நாட்டில் வருவதாக கால் ஊன்ற வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் பாஜக தற்போது அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. வேல் யாத்திரை என்ற பெயரில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், சென்று பாஜகவின் மாநில தலைவர் முருகன் அவர்கள் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகின்றார்.

அந்த கட்சிக்கு புதிய வரவான நடிகை குஷ்பூ அண்ணாமலை போன்றவர்களும் கட்சிக்கு ஒரு புதிய முகத்தை கொடுத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக கூட்டணியில் பிரதான கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப கட்சியின் மேலிடமும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. ஆளும் கட்சியின் கூட்டணியில் இப்போது வேறு எந்த ஒரு முக்கியமான கட்சிகளும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி ஆகியவை மட்டும் தான் பிரதான கட்சி என சொல்லலாம். ஆளும் தரப்பின் கூட்டணியில் ஒரு நிலையான வாக்கு வங்கி இருக்கின்ற கட்சிகள் இந்த இரண்டு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, ஆகிய கட்சிகள் இருக்கின்றன. ஆனால் இந்த கட்சிகள் அனைத்துமே கூட்டணியில் இருந்தாலும் பாஜகவுடன் வலுவான உறவை வைத்திருப்பது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுதினம் பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் வருகையை எதிர்பார்க்கலாம், என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் அமித்ஷா அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கு பெற்றாலும், பாஜகவுடைய அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை மேற்கொள்வதற்காகவே அவர் வருகிறார் என்று சொல்லப்படுகின்றது.

இதனிடையே நாளைய தினம் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டம் அந்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற இருக்கின்றது. நாளை அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் ஒரு நிலையான முடிவின் அடிப்படையிலேயே அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று தெரிவிக்கிறார்கள். ஆனாலும் அவ்வாறு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்த ஒரு திட்டமும் கிடையாது எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அனைத்து துறை அமைச்சர்களும் சென்னை வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அமித்ஷா சென்னை வந்துவிட்டு போகும் வரை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சென்னையிலேயே இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.

அமித்ஷாவின் அரசியல் வருகை முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படும் நிலையிலேயே பாஜகவின் மூத்த தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடுவும் தமிழ்நாட்டில் முகாமிட்டு இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆளுநர் மாளிகையில் சில நிகழ்வுகளில் முக்கிய விருந்தினராக பங்குபெறும் அவர் 24ஆம் தேதி சென்னையில் இருந்து குஜராத் வதோரா சென்று விட்டு 25ஆம் தேதி மீண்டும் சென்னை வருகின்றார்.

இதுபோன்ற சூழ்நிலையில் அமித்ஷா வருகை மற்றும் வெங்கையாநாயுடுவின் 15நாள் பயணம் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பாக வலுவான போட்டி அளிக்க வேண்டும் என்பதும் சட்டமன்றத்தில் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும் என்பதிலும் அந்த கட்சி மிக உறுதியாக இருக்கின்றது. அதற்கான பல திட்டமிடுதலில் அமித்ஷா வருகையும் வெங்கைய்யாநாயுடுவின் பயணமும் அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றார்கள்.

Exit mobile version