அசைந்து கொடுக்காத முதல்வர்! டெல்லிக்கு பறந்த அமித்ஷா!

0
177

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கின்ற நிலையில், தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்வதில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

அதேபோல பாஜகவுடன் பேச்சுவார்த்தையை அதிமுக ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்து சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முழுவதுமே காரைக்கால் விழுப்புரம் போன்ற இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கின்றார்.

இதனை அடுத்து நேற்று இரவு தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் அமித்ஷா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். கிண்டியில் இருக்கின்ற தனியார் சொகுசு விடுதி ஒன்றில் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையானது நேற்று இரவு வெகு நேரமாக நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக பாஜகவின் தலைவர் எல். முருகன் போன்றோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இரவு 10 மணியளவில் ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்றது. பேச்சுவார்த்தை உடனடியாக முடியாததற்கு காரணம் சசிகலா தான் என்ற ஒரு தகவலும் கிடைத்திருக்கிறது. அமித்ஷா சசிகலாவை அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனாலும் அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக பிடி கொடுக்காத காரணத்தால், இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இந்த கட்சிக்கு 60 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தரப்பில் கேட்கப்பட்டது. இருந்தாலும் அதற்கு அதிமுக சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக, எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அமித்ஷா கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அமித்ஷா டெல்லிக்குப் புறப்பட்டுவிட்டார். விரைவில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.