பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்!
திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் நல்லி கவுண்டம்பாளையத்தில் செட்டி தோட்டம் என்ற இடம் உள்ளது. அங்கு வசித்து வந்தவர் மாறப்பன். இவரது மகன் ராஜேந்திரன். 34 வயதான இவருக்கு பல வருடங்களாக பெண் பார்த்து வருகின்றனர். இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் தங்கி விவசாயத் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவலூரில் உள்ள சந்திரன் என்பவரிடம் தனக்குப் பெண் பார்க்கச் சொல்லி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
அதன் காரணமாக சந்திரன் திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்து பாளையம் அம்பிகா என்ற பெண்ணை திருமணத் தரகர் என ராஜேந்திரனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அம்பிகா அரியலூர் பகுதியில் உள்ள வள்ளியம்மாளை அறிமுகம் செய்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாள் தன் வீட்டுக்குச் ரீசா என்ற மணப்பெண், மற்றும் அவரது அக்கா தங்கம் மற்றும் பெரியம்மா தேவி ஆகியோர் வந்துள்ளதாக கூறி ராஜேந்திரனை குடும்பத்தோடு பெண் பார்க்க வரச் சொல்லி உள்ளார்.
இதனை நம்பிய ராஜேந்திரனும் பெண் கிடைத்த சந்தோஷத்தில் கடந்த 22 ஆம் தேதி அவரது வீட்டிற்கு கூட்டிச் சென்று உறவினர்கள் படை சூழ பூ, பொட்டு வைத்து நிச்சயதார்த்தம் முடித்துள்ளனர். அந்த சமயத்தில் புரோக்கர்கள் அம்பிகா மற்றும் வள்ளியம்மாள் பெண்ணிற்கு உறவுமுறை என்று யாருமில்லை. அதன் காரணமாக உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதனையும் நம்பிய ராஜேந்திரன் இரண்டு நாட்களுக்குள் அதாவது கடந்த 24 ம் தேதிக்குள் மணப்பெண்ணிற்கு தேவையான தங்கத்தாலி, தங்கத்தோடு மற்றும் பட்டுப்புடவை போன்றவை எடுப்பதற்கு என 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். உள்ளூரில் இருந்த ராஜேந்திரனின் குலதெய்வ கோவிலான செல்லியம்மன் கோவிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் தடபுடலாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணம் முடிந்ததும் புரோக்கர்கள் கமிஷன் ஆக ஒரு 130000 பணம் பெற்றுக்கொண்டுள்ளனர். அதேபோல் திருமணம் முடிந்த அடுத்த நாளான 25 ம் தேதி அந்த மணப்பெண் முழு அலங்காரத்துடன், கணவன் வீட்டில் இல்லாத சமயத்தில், சுமார் மதியம் 3 மணி அளவில் கார் வரவழைத்து அதன் மூலம் ஏறிச்சென்று மாயமாகிவிட்டார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளார்.
ஆனால் அந்த பெண்ணின் தொலைபேசி எண் சுட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. உடனடியாக இது பற்றி ப்ரோக்கர் சந்திரனிடம் அவர் விசாரித்துள்ளார். எனவே சந்திரன் மணப்பெண் கூறிய விலாசத்திற்கு, அதாவது அரியலூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கு அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 9 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதை கேட்டு ராஜேந்திரன் அதிர்ந்து போய் விட்டார். ஆனால் இரண்டு குழந்தைகளும் அந்த பெண்ணின் தாய் பராமரிப்பில் உள்ளார்கள் என்பது தெரியவந்தது. அந்த ரீசா தனது கணவரை பிரிந்து கடந்த நான்கு வருடங்களாக கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தனது உறவினர்கள் இதுமாதிரி திருமணம் செய்தால் பணம் கிடைக்கும் என்று கூறியதன் காரணமாக இதற்கு ஒத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக மிகவும் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் அதன் பிறகு குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஏற்கனவே திருமணம் முடித்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து வைத்து, என்னிடம் நகை மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளனர் என்று புகார் மனு அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, எஸ்.ஐ. துரைசாமி மற்றும் காவலர்கள் மணப்பெண்ணாக இருந்த ரீசா மற்றும் புரோக்கர் அம்பிகா, வள்ளியம்மாள், உறவினர்கள் என்று கூறிய தங்கம், தேவி ஆகியோரை கைது செய்து உள்ளனர். அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததோடு நீதிபதி அவர்களுக்கு 15 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.