பொறியியல் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!! பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!!
பொறியியல் மாணவர்களுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி அவர்கள் அறிவித்துள்ளார்.
நடப்பாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை மாதம் 22ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் “தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அதாவது கவுன்சிலிங் வரும் ஜூலை 22ம் தேதி முதல் தொடங்குகின்றது. ஜூலை 22ம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கின கலந்தாய்வு ஜூலை 26ம் தேதியில் முடிவடையும். அதன்பின்னர் 2ம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22ம் தேதி வரை நடைபெறும். அதன் பிறகு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை 3ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
தமிழகத்தில் மொத்தம் 430 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 1.57 லட்சம் இடங்கள் பொறியியல் படிப்புகளுக்காக உள்ளன. கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதலாக 3100பொறியியல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் இந்த ஆண்டில் மேலும் புதிதாக இரண்டு படிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5சதவீதம் இட ஒதுக்கீட்டில் சுமார் 11804 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க சுமார் 1,78,959 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வழக்கமாக பொறியியல் கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வருடம் 3 சுற்றுகளாக நடத்தப்படவுள்ளது. பொறியியல் படிப்புகளில் ஒரு காலியிடம் கூட மீதம் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
செப்டம்பர் 15ம் தேதியில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்துவிடும். செப்டம்பர் 15ம் தேதிக்கு மேல் காலியிடங்கள் இருந்தால் அதை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படும்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார்.