Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!!

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், “கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த குருங்குடி என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது.

Anbumani Ramadas' request for those who died in the Kurungudi firecracker factory explosion !!
Anbumani Ramadas’ request for those who died in the Kurungudi firecracker factory explosion !!

 

உயிரிழந்த எனது சகோதரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குருங்குடி கிராமத்தில் காந்திமதி என்பவருக்கு சொந்தமான வானவெடி மற்றும் நாட்டுவெடி தயாரிக்கும் தொழிற்சாலை கொரோனா ஊரடங்கை ஒட்டி மூடப்பட்டு நேற்று தான் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை தொழிற்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்தில் ஆலை உரிமையாளர் காந்திமதி உள்ளிட்ட 7 பெண்கள் அந்த இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

 

மேலும், இரு பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தனர். அன்றாட செலவுகளுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்த சகோதரிகள் வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக பணிக்கு சென்ற போது இன்னுயிரையே இழந்துள்ளனர்.

 

பட்டாசு ஆலையில் பணியாற்றுவது மிகவும் ஆபத்தானது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், வாழ்வாதாரம் ஈட்ட வேறு வழியில்லாததால் மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தான் இத்தகைய பணிகளுக்கு செல்கின்றனர்.

 

இனியும் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாத வகையில் வெடி தயாரிப்பு ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வெடி ஆலைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சத்துக்கு காப்பீடு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

 

குருங்குடி ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அவசரகால உதவிகளை அப்பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் அந்த இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version